‘அர்ஜிடினம்’ என்கிற லத்தீன் சொல்லுக்கு, ‘வெள்ளி’ என்று பொருள். இதிலிருந்து வந்ததே அர்ஜென்டினா. மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் வெள்ளி நிறைந்த நாடு இது. தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மற்றும் உலகின் எட்டாவது பெரிய நாடு. ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ள நாடும் இதுவே. 22 மாகாணங்களையும் ஒரு தன்னாட்சி நகரத்தையும் உள்ளடக்கிய நாடு. அர்ஜென்டினாவின் தலைநகரான ப்யூனஸ் அயர்ஸ் (Buenos Aires), அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம். உலகின் மிகப்பெரிய நகரங்களில் இதுவும் ஒன்று. ‘ப்யூனஸ் அயர்ஸ்’ என்றால், ‘நிதானமான காற்று’ என்று பொருள். இந்த நகரத்தில் உள்ள எல் அடென்நியோ கிராண்டு பெல்ன்டிட் (El Ateneo Grand Splendid) என்ற புத்தகக் கடை, உலகின் மிக அழகான புத்தகக் கடை என்று பெயர் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஒரு தியேட்டராக இருந்து, புத்தகம் மற்றும் இசைக் கடையாக மாற்றப்பட்டது.
